Sunday, August 22, 2010

விதி வைத்த முற்றுப்புள்ளி

மகளே!

மூச்சுக் காற்று மட்டும்
உரிமை கோரும்
ஏகாந்தமான இரவொன்றில்
உன் நினைவுகளை
கொஞ்சம் அசை போடுகிறேன்...

தாயின் கருவறைக்கு
அர்த்தம் கொடுத்தவளே!
தந்தை என் மனதில்
பூவாய்  பூத்தவளே!

உறக்கம் இன்றிய இரவுகளில்
உன் அழுகை எனக்கு தாலாட்டு
ஆபீஸ் களைப்பில் வரும் எனக்கு
உன் அழுகை தானே வாடைக்காற்று

தென்றல் என்னை தீண்டியதாய்...
சாரல் என்னை சீண்டியதாய்...
எனக்குள் ஒரு கிளுகிளுப்பு
உன் பிஞ்சு விரல்களை தாங்கையில்

நிலவை கையில் ஏந்தியதாய்...
பூக்களே என்னை தாங்குவதாய்
எனக்குள் ஒரு பூரிப்பு...
என் மடியில் உன் தலை சாயுகையில்

பாவாய் நீயும்
பாவை ஏந்தி
விளையாடும் ஒரு கணத்தில்
பூவாய் மாறி
உன் தாய் நெஞ்சும்
அமிர்தம் சுமப்பது அறிவாயோ?

ஆயிரம் நாட்கள் காத்திருந்து
ஆறுதலாக பிறந்தவளே!
ஆறு வருடம் கூட உன் ஆயுள்
இறைவன் விதியில் நிலைக்கலையே?

தாங்கிய காம்புகள் தனித்திருக்கிறது
கனவிலாவது நீ வருவாய்
ஆயுள் முழுக்க உன் நினைவிருக்க
மாறி மாறி முத்தமிடுவாய்

          -ஜாவிட் ரயிஸ்




.

No comments:

Post a Comment